Yazh Suthakar Pathilkal

Wednesday, May 19, 2004

எல். முத்துராஜ், மதுரை 9
அதிர்ஷ்ட எண்ணுக்குப் பெயரை மாற்றிக் கொண்டால், வாழ்க்கையில் துன்பங்கள் குறைந்து வெற்றிகள் கூடும் என்று சிலர் நம்புகிறார்கள். பகுத்தறிவுக்கு இது ஒத்து வருமா ?

விதி வலியது. அது எதற்கும் அசைந்து கொடுக்காது. அதிர்ஷ்டக் கல் மோதிரம் அணிந்தோ, பரிகாரம் செய்தோ விதிக்கப்பட்ட எதையும் மாற்ற முடியாது.
அது அது அந்தந்த நேரத்தில் நடந்தே தீரும். ஆண்டவனின் அவதாரங்கள் கூட அதற்குத் தப்பியதில்லை. நாம் எம் மாத்திரம் ?

வ. சிவபாலன், கண்டி
வானொலி அறிவிப்பாளர்களில் உங்களை மிகவும் வசீகரித்தவர் யார் ?

வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கு அருகில் ரசிக நெஞ்சங்களை கூடியிருக்க வைத்து துள்ள வைத்த அந்த குதூகலக் குரல்.

க. திருநாவுக்கரசு, கும்பகோணம்
பொய் பேசலாமா ?

உண்மை பேசுங்கள். நியாயமாக நடந்து கொள்ளுங்கள். உண்மை எடுபடாத பட்சத்தில், பொய் பேசுங்கள். அதுவும் பொய்யர்களே வெட்கித் தலை குனியும் அளவுக்குப் பேசுங்கள். தப்பில்லை.

மு. வைத்தியநாதன், திருச்சி
உமது அபிமான நடிகர் யார் ?

நான் தான்.
பொறாமையும் போலித்தனமும் கலந்த மனிதர்கள் மத்தியில் என் பிழைப்பு நடப்பதால் ஆளுக்கேற்றபடி நடித்து நடித்தே நாட்களை நகர்த்த வேண்டி இருக்கிறது.

சி. தமிழ்ச்செல்வி, சிங்கப்பூர்
கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளில் தங்களை மிகவும் கவர்ந்த வரிகள் ?

நிறைய பேசலாம். உதாரணத்துக்கு ஒன்று -
தங்கத்தைப் பூட்டி வைத்தாய். வைரத்தைப் பூட்டி வைத்தாய்
உயிரைப் பூட்ட ஏது பூட்டு ?
குழந்தை, ஞானி இந்த இருவர் தவிர இங்கு
சுகமாய் இருப்பவர் யார் காட்டு?

கே. லீலா, திருவனந்தபுரம்
நாயகன் திரைப்படத்தில் கமல்ஹாசனைப் பார்த்து ஒரு குழந்தை கேட்கும் நீங்கள் நல்லவரா ? கெட்டவரா ? என்று அதற்கு அவர் தெரியலையே.. என்று பதில் சொல்வார்.
அன்பு நெஞ்சனே நீங்கள் நல்லவரா ? கெட்டவரா ?
பச்சோந்தி.

மு. சோலையப்பன், ராஜபாளையம்
பிரார்த்தனை செய்வதால் நமக்கு வரப்போகும் துன்பங்கள் குறையுமா ?

குறையாது. வேண்டுதல்களினாலோ, பிரார்த்தனையினாலோ வரப் போகும் துன்பங்களைக் குறைக்க முடியாது.
பிரார்த்தனை.. மனதை லேசாக்குகிறது. அல்லது எந்த சோகத்தையும் எதிர்கொள்ளக் கூடிய மனத் தெம்பைத் தருகிறது. அதற்குமேல் எதையும் எதிர்பார்ப்பது விவேகமல்ல.

க.த. வெற்றிச் செல்வன். கோயம்புத்தூர்
உண்மையான நண்பர்களை எது இனங் காட்டுகிறது ?

நமக்கு வரும் ஏற்றத் தாழ்வுகள்.
அப்போது தான்... பஸ்நண்பர் யார் ? பர்ஸ்நண்பர் யார் ? பாச நண்பர் யார் ? என்பதெல்லாம் பளிச் சென்று அடையாளம் தெரியும்.

ம. திவாகர், சென்னை - 4
மாமியார் மருமகள் மத்தியில் பனிப்போர். அதனால் அடிக்கடி என் நிம்மதி குலைகிறது. மன உளைச்சல் அதிகமாகிறது. என்ன செய்ய ?

அம்மா பக்கம் நியாயமிருந்தால் மனைவியைக் கண்டியுங்கள். மனைவி பக்கம் நியாயமிருந்தால் அம்மாவிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லுங்கள்.
இரண்டு பக்கமும் கோளாறு இருந்தால் -
இருவரையும் தனித்தனியாகக் கூப்பிட்டு உங்கள் அனாவசிய ஈகோவினால் எனது நிம்மதி போகிறது என்று வெளிப்படையாகப் பேசிப் புரிய வையுங்கள். விட்டுக் கொடுப்பதுதான் வாழ்க்கை என்று திரும்பத் திரும்பச் சொல்லிப் பாருங்கள்.

அதற்கும் பலனில்லை என்றால் -
டபிள் கேம் ஆடி நீங்கள் மட்டும் தப்பிக்கப் பாருங்கள். யார் பஞ்சாயத்துக்கு அழைத்தாலும் அலட்சியமாக இருங்கள். அவர்கள் உருவாக்கும் எந்தப் பிரச்சனையையும் சீரியஸாகப் பார்க்காதீர்கள். முடிந்தவரை ஜடமாக இருங்கள்.
இல்லையேல், உங்களை விநாயக்ராமின் கடமாக்கி விடுவார்கள்.

வ. செல்வமனோகரி, சிட்னி, ஆஸ்திரேலியா
நீங்கள் சந்தித்த, பெருந்தன்மைக்கு உதாரணமான இரண்டு நிகழ்ச்சிகளைக் கூற முடியுமா ?

1983 என்று நினைக்கிறேன்.
பருத்தித் துறையில் லிவர்பூல் என்ற ரியூட்டரியில் நானும், எனது நண்பர் கண்ணனும் (நந்தகுமார்) ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தோம். இருவருமே வளர்ந்து வரும் கால கட்டம் அது.
அந்த சமயத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு பிரபல டியூசன் சென்டரில் லொஜிக் பாடத்தைப் படிப்பிக்கும் வாய்ப்பு எங்கள் இருவரையும் ஒரே நேரத்தில் தேடி வருகிறது.

குறியீட்டு அளவையியல் என்ற முதல் பாகத்தை அவரும், விஞ்ஞான முறை என்ற இரண்டாம் பாகத்தை நானும் பிரித்துப் படிப்பிக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் கண்ணன் என்ன சொன்னார் தெரியுமா ?
புதியவர்கள் யாருக்குமே கிடைக்க முடியாத ஒரு பெரிய வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது. அதுவும் யாழ்ப்பாணத்தில் பல ஜாம்பவான்கள் படிப்பித்துக் கொண்டிருக்கும் ஒரு டியூட்டரியில். எனவே இந்த வாய்ப்பினால் கிடைக்கப்போகும் முழுப் புகழையும், பயனையும் நீங்கள் ஒருவரே அனுபவியுங்கள். இடையிலே நான் எதற்கு ? என்று சொல்லி லொஜிக் பாடம் முழுவதையும் என்னையே படிப்பிக்கச் சொல்லி வற்புறுத்தினார்.

எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத கண்ணனின் அந்தப் பெருந்தன்மை.......
இத்தனை வருடங்கள் கழிந்த பின்பும் என்னை ஈரப்படுத்திக் கொண்டிருக்கிறது.

1993இல் எனது நண்பர் தேவன் என்னை ஒரு வானொலித் தயாரிப்பாளரிடம் அறிமுகப்படுத்தி அதில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பையும் வாங்கித் தந்தார்.
அங்கே தேவனுக்கும் சில நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது.
அங்கு பணிபுரிந்த ஒரு நிகழ்ச்சி நிர்வாகி.... (பூசாரி) தேவன் அங்கு தொடர்ந்து நிகழ்ச்சிகளைப் பண்ண முடியாதபடி சில சிக்குமங்கா வேலைகளை (நாகரீகமாகச் சொன்னால்..... சூழ்ச்சி) செய்ததால் தேவன் அந்த வேலையை உதறிவிட்டு வெளியே வந்தார்.

அப்படி அவர் வெளியே வந்த பிறகும் கூட..... தாய் பகை குட்டி உறவா ? என்று கேட்பதைப் போல..... நான் தேவையில்லை. நான் கொண்டு வந்த அன்பு நெஞ்சன் உங்களுக்குத் தேவையா ? என்று அவர்களிடம் கேட்டிருக்கலாம்.
அல்லது -
நீயும் வெளியே வா..... என்று என்னையும் கூட்டிவந்து அவர்களுக்குப் பாடம் புகட்டி இருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை.

என்னை வந்து சந்தித்து நடந்ததைக் கூறிவிட்டு..... எனது நிகழ்ச்சி நேரத்தையும் நீங்களே எடுத்துச் செய்யுங்கள்... என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு சென்றார். இந்த சம்பவத்தை இன்று அவர் மறந்திருக்கக்கூடும். ஆனால்... இன்றும் என்னை மானசீகமாகத் தொழ வைக்கின்றது இந்த தோழனின் பெருந்தன்மை.

இந்த இரண்டு சம்பவங்களும் என் ஞாபகத்துக்கு வரும் போதெல்லாம்..... சுயநலமே பிரதானம் என்று நான் நடந்து கொண்ட காலங்கள் என் நினைவுக்கு வந்து கூனிக் குறுகிப் போகின்றேன்.


எ°. மணிகண்டன், புதுடில்லி
சிவாஜியையும் தூக்கி எழுதுகிறீர். எம்.ஜி.ஆரையும் தூக்கி எழுதுகிறீர். உம்மைப் புரிந்து கொள்ளவே முடியவில்லையே... உமது உண்மையான முகம் எது ஐயா ?

தெரியவில்லை.

வெ. ராமலிங்கம், காஞ்சிபுரம்
இதற்கு முன்பு வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் எழுதிய அனுபவம் உண்டா ?

1991, 1992இல் பொம்மை சினிமாப் பத்திரிகையில் பட்டி பதில்கள் என்ற பகுதியில் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் தந்திருக்கிறேன்.

உங்களால் பதில் சொல்ல முடியாத கேள்வி எது ?

இன்னும் குழந்தையாகவே இருக்கிறாயே... நான் மண்டையைப் போட்ட பிறகு என்ன தான் செய்யப் போகிறாய் ?.... என்று என் தந்தை கேட்ட கேள்விக்கு அவர் மறைந்து 5 ஆண்டுகளாகியும் எனக்கு பதில் தெரியவில்லை.

பதில்கள் பகுதிக்கு கேள்விகளை அனுப்புபவர்கள் கேள்விகளை ஆங்கிலத்திலோ, ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தி தமிழிலோ எழுதி அனுப்பலாம்.
part1
:: posted by suratha yarlvanan, 7:11 AM

0 Comments:

Post a Comment